பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘கான் சிட்டி’ (Con City). இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ், நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த நடிகை வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கும் சூழலில், அவரது கையில் ஒரு விசித்திரமான இயந்திரம் கிடைக்கிறது. அந்த இயந்திரத்தில் உள்ள பட்டனை அழுத்தும் போதெல்லாம் பணம் கொட்டத் தொடங்குகிறது. இந்த இயந்திரம் அந்த குடும்பத்தின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களும், அதன் பின்னர் கணவன், மனைவி மற்றும் குடும்பத்தினருக்குள் நடைபெறும் சம்பவங்களும் இப்படத்தின் முக்கிய கதைக்களமாக அமைந்துள்ளது.
புதுமையான கதைக்களத்துடன் குடும்பம் முழுவதும் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தன. குறிப்பாக படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
