நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. இது நடிகர் தனுஷின் 55வது திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ஆர் டேக் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. மேலும், இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல், கதாநாயகிகளாக நடிகைகள் ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்துவருகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது பெரும்பாலான காட்சிகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படத்தை வரும் அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை வெளியீடாக திரையரங்குகளில் கொண்டு வர தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படமும் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் நேருக்கு நேர் பாக்ஸ் ஆபிஸ் மோதலில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
