பிரபல நடிகர் ரவி மோகன், 45 வயதான இவர், ‘ஜெயம்’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவருக்கும் அவரது காதல் மனைவி ஆர்த்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும், தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக விவாகரத்து வழக்கு முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகையான மீரா சோப்ரா, ரவி மோகனுக்கு ஆதரவாக தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். ஜெயம் ரவியுடன் தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவர், தனது எக்ஸ் தள பதிவில், “தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்து ரவி மோகனை எனக்கு நன்றாக தெரியும். சமீபத்தில் அவரது விவாகரத்து தொடர்பான செய்திகளை பார்த்தேன். திருமண முறிவுகளில் எப்போதும் ஆண்களே தவறானவர்கள் என்று கூற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது பதிவில், “பெண்களுக்குச் சாதகமாக இருக்கும் சில சட்டங்களை, சில பெண்கள் தங்களுக்கு சாதகமாக தவறாக பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு ஆணின் தரப்பில் உள்ள உண்மைகளும் கேட்கப்பட வேண்டும். ரவி மோகன் மிகவும் இனிமையான மற்றும் எளிமையான மனிதர். அவருடைய தரப்பிலுள்ள உண்மையும் நீதியும் இறுதியில் வெற்றி பெறும் என நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
