திமுக – அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க நடிகர் ரஜினிகாந்த் முயற்சி செய்ததாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்த தகவல்கள் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து தற்போது ரஜினிகாந்த் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது:- “முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தோல்வியடைந்தது எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தமாக இருந்தது. அவர் எனக்கு 38 ஆண்டுகளுக்கும் மேலான நெருங்கிய நண்பர். எங்களுடைய நட்பு என்பது அரசியல் கொள்கைகளை தாண்டிய ஒன்று. அதனால் தான் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். ஆனால், அதை வைத்து விஜய் முதல்வராக வருவதை தடுக்க, இரண்டு பெரிய கட்சிகளையும் ஒன்றிணைக்க நான் முயன்றதாக சிலர் விமர்சனம் செய்தனர். அப்படி தரம் தாழ்ந்து பேசக்கூடிய மனிதர் இந்த ரஜினிகாந்த் அல்ல.
விஜய் வெற்றி பெற்றவுடன் சமூக வலைதளம் மூலமாக நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தேன். சமீபத்தில் நான் விமான நிலையத்திற்கு சென்றபோது ஒருவர் விஜய் முதல்வராகியதைப் பற்றி கேள்வி கேட்டார். அவர் பத்திரிகையாளர் போலவே தெரியவில்லை. ஒரு மொபைல் போனில் வீடியோ பதிவு செய்துகொண்டே கேள்வி கேட்டதால் நான் பதில் சொல்லாமல் சென்றேன். அதையும் வைத்து நான் விஜய்க்கு வாழ்த்து கூறவில்லை என்று விமர்சித்தார்கள்.
மேலும், விஜய் மீது எனக்கு பொறாமை என்று கூட சிலர் பேசினர். நான் அரசியலிலேயே இல்லை. அப்படியிருக்கையில் விஜய் முதல்வராகியதற்கு எனக்கு ஏன் பொறாமை வர வேண்டும்? ஒருவேளை கமல் முதல்வராகி இருந்தால் பொறாமை வந்திருக்குமோ இல்லையோ தெரியாது. எனக்கும் விஜய்க்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தலைமுறை வித்தியாசம் இருக்கிறது. அவர் முதல்வராகியது எனக்கு பொறாமையை அல்ல, ஆச்சரியத்துடன் கூடிய மகிழ்ச்சியை தான் கொடுத்தது. சினிமா மூலம் கிடைத்த புகழால் அவர் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
இப்போது விஜயின் மீது மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பை அவர் நிச்சயமாக பூர்த்தி செய்வார் என்று நம்புகிறேன். மக்களை நேரில் சந்தித்து நல்ல ஆட்சியை வழங்குவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அவருக்கு குறைந்தது 2 ஆண்டுகள் எந்தவித தொந்தரவுமின்றி வேலை செய்ய அவகாசம் வழங்க வேண்டும்.அதேநேரத்தில் இனிமேல் விஜய் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ரசிகர்கள், தொண்டர்கள் அல்லது அவரைச் சுற்றியுள்ளவர்கள் யார் தவறு செய்தாலும் அதன் பாதிப்பு நேரடியாக அவர்மீதே விழும்.
நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பது குறித்து ஏற்கனவே சுமார் 3 பக்க விளக்கத்தை கொடுத்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் வெற்றி பெற்றிருப்பேன். தற்போது சினிமா துறையைச் சேர்ந்த பலரும் முதல்வர் விஜயை சந்தித்து வருகின்றனர். ஆனால் சும்மா சம்பிரதாயத்திற்காக சென்று சந்தித்து வருவது எனக்கு பிடிக்காது. கடந்த 60 ஆண்டுகளாக இரண்டு பெரிய கட்சிகளின் ஆட்சியையும் பார்த்துவிட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் மாற்றம் வேண்டும் என்று முடிவு செய்து விஜயை தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் சமூக வலைதளங்களும் முக்கிய பங்கு வகித்துள்ளன. விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ரஜினிகாந்த் கூறினார்.
