‘பேட் கேர்ள்’ திரைப்படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்த நடிகை அஞ்சலி சிவராமன், தற்போது இந்திய நவீன ஓவிய உலகின் முன்னணி பெண் ஓவியரான அமிர்தா ஷெர் கில் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘அம்ரி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹிந்தி திரைப்படத்தில், அமிர்தா ஷெர் கில் கதாபாத்திரத்தில் அஞ்சலி சிவராமன் நடிக்கிறார்.
அமிர்தா ஷெர் கில் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை இந்தியரும், தாய் ஹங்கேரியரும் ஆவார். ஓவியக் கலையில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்த அமிர்தா, 1934ஆம் ஆண்டு இந்தியா வந்து, எல்லோரா மற்றும் அஜந்தா ஓவியங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பின்னர் அந்த பாரம்பரிய ஓவியங்களை நவீன பாணியில் உருவாக்கியதோடு, அன்றைய சாதாரண மக்களின் வாழ்க்கை முறைகளையும் தனது ஓவியங்களில் பதிவு செய்தார். குறிப்பாக 1930களில் வாழ்ந்த இந்திய மக்களின் வாழ்க்கை முறையை அவரது ஓவியங்கள் வரலாற்றுப் பதிவாக எடுத்துரைக்கின்றன.
ஆனால் வெறும் 28 வயதிலேயே அமிர்தா ஷெர் கில் மரணமடைந்தார். அவரது மரணம் இன்று வரை புதிராகவே இருந்து வருகிறது. இந்நிலையில், அவரது வாழ்க்கைக் கதை தற்போது ‘அம்ரி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கிய மீரா நாயர் இந்தப் படத்தை இயக்குகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட நடிகைகளை ஆடிஷன் செய்த பின்னர், அமிர்தாவின் தோற்றத்திற்கும் கதாபாத்திரத்திற்கும் பொருத்தமாக இருந்ததால் அஞ்சலி சிவராமன் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா, ஜெய்தீப் மற்றும் ஜிம் சரப் உள்ளிட்ட பலரும் சிறப்பு தோற்றங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஹங்கேரி, பிரான்ஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு இடங்களில் நடைபெற உள்ளது.
