கடந்த 2022ஆம் ஆண்டு செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. தற்போது அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் மற்றும் விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி மீண்டும் இந்த இரண்டாம் பாகத்திலும் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்துள்ளனர். மேலும், முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த் மற்றும் கஜராஜ் ஆகியோரும் இந்த படத்தில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் நடிகர் கருணாகரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முதல் பாகத்தின் கதை நிறைவடைந்திருந்தாலும், அதன் தொடர்ச்சியான கதைக்களத்துடன் இந்த இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. விளையாட்டு பின்னணியுடன் கூடிய குடும்ப நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள இதில், ஒவ்வொரு குடும்பத்திலும் நடைபெறும் அன்றாட பிரச்னைகள் நகைச்சுவை கலந்த முறையில் சொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், வெளியீட்டு அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. அதில், “சம்பாதிப்பது மட்டும் வேலை அல்ல… வீட்டை கவனிப்பதும் முழுநேர வேலைதான்…” என்ற வாசகத்துடன், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
