‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனித்துவமான கவனத்தை பெற்றவர் நடிகர் அர்ஜுன் தாஸ். பின்னர் கதாநாயகனாக உருவெடுத்த அவர், ‘அநீதி’, ‘ரசவாதி’ போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வரும் அர்ஜுன் தாஸ், தற்போது அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கான்சிட்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நகரத்தில் வாழும் ஒரு நடுத்தர குடும்பத்தின் உணர்வுகள் மற்றும் வாழ்க்கைச் சூழல்களை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாகவும், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய கதையாக இருக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ‘கான்சிட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும், இப்படத்தின் ஒலிப்பதிவு உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதுடன், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, ‘கான்சிட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அடங்கிய சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
