‘விழா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதி பாலகுமாரன், தற்போது தனது அடுத்த திரைப்படத்தை இயக்கத் தயாராகியுள்ளார். இந்த புதிய படத்தில் ‘சாம்பியன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஷ்வா நாயகனாக நடிக்கிறார். மேலும், படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவருடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தில் மைம் கோபி, ஆடுகளம் நரேன், ரிஷா ஜாக்கோப்ஸ், முனீஷ்காந்த், அனுபமா குமார், பாபா பாஸ்கர், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 1980களின் மத்தியில் தென் மாவட்டங்களில் நடைபெற்ற அமானுஷ்ய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட உண்மை சம்பவக் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது.
‘ஜென்டில்வுமன்’ திரைப்படத்தை தயாரித்த கோமளா ஹரி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கோமளா ஹரிபாஸ்கரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். படக்குழுவினர் வெளியிட்ட தகவலின்படி, “நமது சமூகத்தின் நீண்டகால கலாச்சாரம், மரபுகள் மற்றும் பண்பாட்டை பதிவு செய்யும் வகையில் இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 22ஆம் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
