இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படத்தில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, தனது 23வது திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் அல்லு அர்ஜுன் இணைய உள்ளார். இந்த கூட்டணியை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்திற்கான இசை மற்றும் கதை தொடர்பான பணிகளில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் தற்போது ஐதராபாத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் தனித்துவமான திரைக்கதை மற்றும் அதிரடி காட்சிகளால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருவதால், இந்த புதிய கூட்டணிக்கும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூஜா ஹெக்டே ஏற்கனவே அல்லு அர்ஜுனுடன் இணைந்து ‘துவ்வடா ஜகன்னாதம்’ மற்றும் ‘அலா வைகுந்தபுரமுலூ’ உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த கூட்டணி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், மீண்டும் இருவரும் இணைவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.‘ராக்கா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
