சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவான ‘வேலும் மயிலும்’ ஆல்பம் பாடல் வெளியீடு!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மூலம் முதல் சுயாதீன ஆன்மிக இசை ஆல்பமாக ‘வேலும் மயிலும்’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இந்த ஆல்பத்தை இயக்கியுள்ள நிலையில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ஆன்மிக உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த இசை ஆல்பம் தற்போது வீடியோ வடிவில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் ஆன்மிக பாரம்பரியத்துடன் ஆழமாக இணைந்திருக்கும் ‘வேலும் மயிலும்’ பாடல், முருகப் பெருமானின் அருளையும் தெய்வீக மகத்துவத்தையும் இசையின் வழியாக வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆழமான வரிகள், நாட்டுப்புற இசையின் தனிச்சிறப்புகள் மற்றும் நவீன இசை அமைப்புகள் இணைந்த இந்தப் பாடல், பக்தர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் மனநிம்மதியையும் ஆன்மிக ஈர்ப்பையும் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலின் ஆன்மிக உணர்வு பாடலின் உள்ளடக்கத்தில் மட்டுமல்லாமல், அதை உருவாக்கியவர்களின் பெயர்களிலும் பிரதிபலிக்கிறது. தயாரிப்பாளரும் பாடலாசிரியருமான சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் சிவகுமார் முருகேசன் ஆகியோரின் பெயர்களும் முருகப் பெருமானுடன் தொடர்புடையவை என்பதால், அவர்களின் பக்தி உணர்வும் முழுமையான ஈடுபாடும் இந்த இசைப் படைப்பிற்கு கூடுதல் சிறப்பை வழங்கியுள்ளது. இதுபோன்ற தனித்துவமான மற்றும் மனதை வருடும் சுயாதீன இசைப் படைப்புகளை தொடர்ந்து வழங்குவதற்கு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், புதிய குரல்கள் மற்றும் திறமையாளர்களுக்கு சிறந்த தளமாக இந்த நிறுவனம் செயல்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading