தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் தவெக தலைவரும் நடிகருமான திரு.ஜோசப் விஜய்!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று (மே 10) அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். மிகுந்த கோலாகலமாக நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், விஜய்யின் பெற்றோர்களான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஒன்றாக கலந்து கொண்ட இந்த நிகழ்வு பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்த விழாவில் பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நடிகர் ஜெய், நடிகைகள் திரிஷா மற்றும் சங்கீதா, பாடகர் கிரிஷ் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதேபோல், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் நாராயாணா, ‘தி கோட்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா, ‘லியோ’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். மேலும், நடிகர் மன்சூர் அலிகான், பாடலாசிரியர் விவேக், விஜய்யின் நெருங்கிய நண்பரும் சின்னத்திரை நடிகருமான சஞ்சய், அவரது மனைவி ப்ரீத்தி சீனிவாசன், நடிகர் ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டு விஜய்க்கு நேரில் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனுடன், தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏவும் விஜய்யின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீநாத் இந்த நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

நீல நிற புடவையில் விழாவிற்கு வந்திருந்த நடிகை திரிஷா, நிகழ்ச்சி அரங்கிற்கு வந்தவுடன் முதலில் விஜய்யின் தாயார் ஷோபாவை அன்புடன் கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த தருணம் அங்கு இருந்தவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. மேலும், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்த கூட்டத்தை நோக்கி நடிகை திரிஷா கை அசைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading