பிக்பாஸ் வார இறுதி நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் மற்றும் ‘ஜனநாயக அறை’ தொடர்பாக தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசினார். அப்போது வீட்டின் தலைவராக இருந்த ஷாத்திகாவின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், தலைமைப் பொறுப்பில் இருப்பவர் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, பிரச்சினைகள் வரும்போது எதிரணியினர் மீது பழியை சுமத்தி தப்பிப்பது சரியான தலைமைக்கு அழகல்ல என்றும், அது ஏமாற்று வேலை என்றும் கடுமையாகக் கூறினார். விஜய் சேதுபதியின் இந்தக் கருத்து முதல்வர் விஜய்யை மறைமுகமாகக் குறிப்பிடுவதாக தமிழக வெற்றிக் கழகத்தினரும், விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், விஜய் டிவி நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 10 அதன் குறிப்பிட்ட கட்டமைப்பு, கருப்பொருள் மற்றும் விளையாட்டுச் சூழலுக்குள் உருவாக்கப்படும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்கள், சூழ்நிலைகள், உணர்வுகள் மற்றும் போட்டியாளர்களின் எதிர்வினைகள் அனைத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கதையோட்டத்திற்குள் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் இடம்பெறும் எந்தவொரு கருத்தும் வெளியுலகில் உள்ள தனிநபர், அமைப்பு, நிறுவனம், சித்தாந்தம் அல்லது வேறு சூழ்நிலையை ஆதரிப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ அல்லது குறிப்பிடுவதாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளது. நிகழ்ச்சியின் பொழுதுபோக்கு நோக்கத்திற்கு அப்பாற்பட்டு செய்யப்படும் எந்தவொரு தொடர்புபடுத்தலும் உள்நோக்கத்தைக் குறிக்காது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
—
