‘சூப்பர் கேர்ள்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

கிரிப்டான் கிரகம் அழிந்த பிறகு தனிமையும் மனவேதனையும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வரும் காரா ஜோர்-எல் என்கிற சூப்பர்கர்ல், தனது 23-வது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், தனது குடும்பத்தை கொடூரமாகக் கொன்ற க்ரெம் மீது பழிவாங்கத் துடிக்கும் ரூத்தி என்ற சிறுமியை சந்திக்கிறார். ஆரம்பத்தில் அவளது பயணத்தில் இணைய விருப்பம் காட்டாத சூப்பர்கர்ல், தனது செல்ல நாய் கிரிப்டோ தாக்கப்படுவதால் மனம் மாறி, ரூத்தியுடன் இணைந்து விண்வெளி முழுவதும் பரபரப்பான வேட்டையில் ஈடுபடுகிறார். இறுதியில் பழிவாங்கும் இந்தப் பயணம் எந்த முடிவை எட்டுகிறது? சூப்பர்கர்ல் தனது வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை மீண்டும் கண்டுபிடிக்கிறாரா? என்பதே படத்தின் மீதிக்கதையாக அமைந்துள்ளது.

சூப்பர்கர்லாக நடித்திருக்கும் மில்லி அல்காக், வழக்கமான சூப்பர் ஹீரோ பாணியைத் தாண்டி மன உளைச்சல்களுடன் வாழும் இளம்பெண்ணாக தனது கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக மிரட்டியிருப்பதோடு, உணர்வுப்பூர்வமான தருணங்களிலும் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். ரூத்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஈவ் ரிட்லி, கதையின் உணர்வுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.

க்ரெம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மத்தியாஸ் ஸ்கோனார்ட்ஸ், அளவான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி கதைக்கு வலுசேர்த்துள்ளார். சிறப்பு தோற்றங்களில் வரும் ஜேசன் மோமோவா மற்றும் சூப்பர்மேனாக நடித்துள்ள டேவிட் கோரன்ஸ்வெட் ஆகியோர் குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகின்றனர். காமிக்ஸ் கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்கியுள்ள கிரேக் கில்லெஸ்பி, வழக்கமான சூப்பர் ஹீரோ கதையை மட்டுமே சொல்லாமல், இழப்பு, பழிவாங்குதல் மற்றும் மனிதநேயம் போன்ற உணர்வுகளையும் வலுவாக பதிவு செய்ய முயற்சித்துள்ளார்.

குறிப்பாக, சூப்பர்மேனின் நிழலில் வாழாமல் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் சூப்பர்கர்லின் பயணத்தை வித்தியாசமான அணுகுமுறையில் காட்சிப்படுத்தியுள்ளார். இருப்பினும், சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்வதும், வில்லன் கதாபாத்திரத்திற்கு போதிய ஆழம் இல்லாததும், கிளைமாக்ஸ் எதிர்பார்த்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தாததும் படத்தின் பலவீனங்களாகத் தெரிகின்றன.

ஒளிப்பதிவாளர் ராப் ஹார்டி, விண்வெளி உலகத்தை பிரமாண்டமான காட்சிகளுடன் திரையில் உயிர்ப்பித்துள்ளார். பல்வேறு கிரகங்கள், விண்வெளி சண்டைக் காட்சிகள் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் அனைத்தும் தரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜங்கி எக்ஸ்எல் அமைத்துள்ள பின்னணி இசை, ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கூடுதல் விறுவிறுப்பையும் தாக்கத்தையும் வழங்கியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading