விரைவில் என்னை நீங்கள் வேறு மாதிரியாகப் பார்ப்பீர்கள்…‌ விமர்சனங்களுக்கு நடிகர் சக்தி வாசு பதிலடி!

நடிகர் சக்தி வாசு நடிப்பில் உருவாகியுள்ள ‘அனலி’ திரைப்படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருந்த அவரது தோற்றம், உடல் எடை மற்றும் ஆடைத் தேர்வு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களையும் ட்ரோல்களையும் பதிவிட்டு கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், அந்த விமர்சனங்களுக்கு நடிகர் சக்தி வாசு தனது சமூக வலைதள பதிவு மூலம் நேரடியாக பதிலளித்துள்ளார்.

பிரபல இயக்குநர் பி.வாசுவின் மகனான சக்தி வாசு, குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘நடிகன்’, ‘ரிக்ஷா மாமா’, ‘சின்ன தம்பி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் ‘தொட்டால் பூ மலரும்’, ‘யுவன் யுவதி’, ‘ஏதோ செய்தாய் என்னை’, ‘தற்காப்பு’, ‘சிவலிங்கா’, ‘7 நாட்கள்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். தற்போது சிந்தியா புரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா இயக்கியுள்ள ‘அனலி’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் அவரது தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சக்தி வாசு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விரைவில் என்னை நீங்கள் வேறு மாதிரியாகப் பார்ப்பீர்கள். உடற்பயிற்சியைத் தொடங்கும்போது என் மன உறுதி மிகவும் அதிகமாக இருக்கும். இது ‘கராத்தே பாபு’ படத்திற்காக நடைபெறும் தயாரிப்பு. அதே நேரத்தில் என்னை விமர்சித்து மேலும் உழைக்கத் தூண்டிய அனைவருக்கும் நன்றி. அது எனக்கு மிகப்பெரிய உந்துதலாக அமைந்துள்ளது. இது எனக்குப் புதிதான அனுபவம் அல்ல. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. விரைவில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், நடிகர் ரவி மோகன் கதாநாயகனாக நடித்து வரும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தில் சக்தி வாசு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்திற்காகவே அவர் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது உடல் தோற்றத்தை முழுமையாக மாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading