வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் படத்தைத் திரையரங்குகளில் காணக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி புரோமோ முக்கியமான விருந்தாக அமையவுள்ளது.
வடசென்னையின் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் இடம்பெறும் சிறப்புப் புரோமோவை தீபாவளியன்று வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. இதில் தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவும் தோன்றவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
ஏற்கெனவே வெளியான ‘அரசன்’ அறிமுக வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்தது. தற்போது அதைவிட விரிவானதாக, சுமார் 7 நிமிடங்கள் ஓடக்கூடிய புதிய வீடியோ தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. வெற்றிமாறன் ஒரே நேரத்தில் ‘அரசன்’, ‘ராஜன் வகையறா’ என வடசென்னை உலகத்தை மையமாகக் கொண்ட இரு படங்களில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
