மறைந்த தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி நாணயமானவர்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்!

ராஜஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியின் உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் இன்று நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “நான் அவருடன் நேரடியாக படம் பணியாற்றவில்லை என்றாலும், அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். ‘இதுவரை 99 படங்களை தயாரித்து விட்டேன். எனது 100வது படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும். அதன் பிறகு நான் ஓய்வு பெற நினைக்கிறேன்’ என்று ஆதித்யராம் ஸ்டூடியோவில் நடைபெற்ற ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தளத்திற்கு வந்து என்னிடம் ஆர்.பி. சவுத்ரி கூறினார். அதற்கு நானும் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று தெரிவித்தேன். அதற்காக பல கதைகளையும் அவர் கேட்டு வந்தார்” என்று கூறினார்.

மேலும் அவர் பேசும்போது, “சில மாதங்களுக்கு முன்பு பல இயக்குநர்களை உருவாக்கிய ஆர்.பி. சவுத்ரிக்கு ஒரு பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கே.எஸ். ரவிக்குமார் என்னிடம் கூறியிருந்தார். ஆனால் அது நடைபெறவில்லை. ஆர்.பி. சவுத்ரி அந்த கால தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரைப் போல மிகவும் வலிமையானவரும், தெய்வ பக்தி மிக்கவரும், நேர்மையானவருமாக இருந்தார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எப்போதும் மிகவும் உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பார். அது எப்படி என்று நான் கேட்டபோது, ‘நான் தேவையற்ற ஆபத்துகளை எடுக்க மாட்டேன். என்னால் முடிந்த அளவிற்குள் தான் படம் தயாரிப்பேன். அதன் பிறகு எல்லாம் இறைவன் விருப்பம்’ என்று கூறுவார். 99 படங்களை தயாரித்திருந்தாலும் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாக பேசி, ஒரு காபி குடித்தபடியே அதை முடித்து விடக்கூடிய மனிதர்” என்று ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading