கன்னட திரைப்பட உலகின் மூலம் அறிமுகமான நடிகை ருக்மிணி வசந்த், தற்போது தென்னிந்திய அளவிலிருந்து இந்திய அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார். ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து நடித்த ‘காந்தாரா சேப்டர் 1’ திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அவர், அதன் பின்னர் ரசிகர்களால் “நேஷனல் கிரஷ்” என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
தற்போது நடிகர் யாஷ் நடித்து வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ருக்மணி வசந்த் நடித்துவருகிறார். அதேபோல் ஜூனியர் என்.டி.ஆர். கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திலும் அவர் கதாநாயகியாக இணைந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் தமிழிலும் இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகை ருக்மணி வசந்த் அண்மையில் பகிர்ந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் அவர் கூறியதாவது: “நடிகர்கள் பஞ்ச் வசனங்கள் பேசுவதாலும், ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதாலும் பல விஷயங்களை சமாளித்து விடலாம். ஆனால் மாடல்களுக்கு அந்த வாய்ப்பு கிடையாது. ஒரு வார்த்தைகூட பேசாமல், முகபாவனைகள் மற்றும் உடல் மொழியின் மூலம் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வேண்டும். அதுதான் மாடல் அழகிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். இன்றுவரை சினிமாவில் நான் தொடர்ந்து கற்றுக்கொண்டு வரும் முக்கியமான விஷயமும் அதுதான்,” என்று தெரிவித்துள்ளார்.
