தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நந்தமுரி பாலகிருஷ்ணா, தனது 111வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கோபிசந்த் மல்லேனி இயக்க உள்ளார். விரிந்தி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம் ஆரம்பத்தில் வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட, மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் ஆக்சன் திரைப்படமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், பின்னர் அதிக செலவு காரணமாக, இந்த திரைப்படத்தின் கதை மற்றும் அணுகுமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்த வரலாற்று கதைப்பின்னணி மாற்றப்பட்டு, புதிய கோணத்தில் படம் உருவாக்கப்படுகிறது. தயாரிப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் திட்டமிடல் மாற்றங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் அவர் இந்தப் படத்திலிருந்து விலகியுள்ளார். இதனால், தற்போது அவரது இடத்தை நிரப்பும் வகையில் காஜல் அகர்வால் கதாநாயகியாக இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் காஜல் அகர்வால் இணைந்து ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
—
