பிரேமலு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் கிரிஷ் ஏ.டி, அதன் இரண்டாம் பாகமான பிரேமலு 2 தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால், அந்தக் கதையில் திருப்தி இல்லாத காரணத்தால், அதன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் உருவாகும் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தில், மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இந்தப் படத்தை பகத் பாசில் தயாரிக்கிறார்.
இந்த நிலையில், பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படம் வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிவின் பாலி நடித்த சர்வம் மாயா திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவருடைய பிற படங்களான பேபி கேர்ள் மற்றும் பிரதிச்சயா ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனிடையே, நிவின் பாலி நடிப்பில் உருவாகும் வரவிருக்கும் படங்களில் டியர் ஸ்டூடண்ட்ஸ் (நயன்தாரா உடன்), பென்ஸ் (ராகவா லாரன்ஸ் உடன்), மற்றும் ஏழு கடல் ஏழு மாலை (சூரி, அஞ்சலி, ராம் உடன்) போன்ற படங்களும் இடம்பெறுகின்றன.
—
