கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் கடந்த ஆண்டு இதே நாளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை நடிகை பூஜா ஹெக்டே நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார்.
அவர் தனது பதிவில், “ரெட்ரோ திரைப்படத்தின் ஓராண்டு நிறைவு இன்று. புயல்கள், தசைநார் கிழிவுகள், முடிவில்லாத சேறு, எங்கள் படகு தீப்பற்றிய தருணம் (சுஹாஸ் – என்றென்றும் ஒரு கதாநாயகன்), மேலும் பாம்புகள் நிறைந்த ஒரு தீவு… எல்லாவற்றையும் பொருத்தவரை இது முழுமையான குழப்பமாக இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. அது அமைதியாலும், நேர்மறையான ஆற்றல்களாலும், நிறைய சிரிப்புகளாலும், ‘வெறும் காதலுக்காகவே’ எதையாவது உருவாக்குகிறோம் என்ற உணர்வாலும் நிரம்பியிருந்தது.
சரியான மனிதர்களுடன் இணைந்து, சினிமாவைப் பற்றிய உண்மையான காதலுடன் நீங்கள் ஒரு படைப்பை உருவாக்கும்போது, மிகக் கடினமான நாட்கள்கூட எளிதாகத் தோன்றுகின்றன. கார்த்திக் சுப்பராஜ் – எங்கள் ‘கேப்டன்’, நான் ‘ருக்கு’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்று என்னிடம் வைத்த நம்பிக்கைக்கு நன்றி,” என்று மனம் திறந்து தெரிவித்துள்ளார்.
—
