சாதி மற்றும் மத அடிப்படையில் உருவாகும் பிளவுகள் நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்ற கருத்தை முன்வைத்து, சமூகத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தன்னை “சாதி, மதமற்றவர்” என அறிவிக்கும் சான்றிதழை வழங்க வேண்டும் என்று கோரி இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு முன்பாக சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் அவர் அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால், நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, பார்த்திபனின் கோரிக்கையை ஏற்று, ஒரு வார காலத்திற்குள் “சாதி, மதமற்றவர்” என்ற சான்றிதழை வழங்குமாறு சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 27ஆம் தேதி சோழிங்கநல்லூர் வட்டாட்சியர், பார்த்திபன் எந்தச் சாதியையும் அல்லது மதத்தையும் சாராதவர் என்பதற்கான சான்றிதழை வழங்கினார். இதன் மூலம் அவர் தனது சாதி மற்றும் மத அடையாளங்களை சட்டபூர்வமாக துறந்துள்ளார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சான்றிதழ் வழங்கப்பட்ட விவரம் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் நீதிமன்ற உத்தரவின்படி நடிகர் பார்த்திபன் “சாதி, மதமற்றவர்” என்ற சான்றிதழைப் பெற்றுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன், “என்னை பலர் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று கூறுகின்றனர். நான் சாதி, மதம் தேவையில்லை என்று கூறி இந்தச் சான்றிதழைப் பெற்றதால்தான் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள். சிலர் என்னை பாராட்டுகின்றனர், சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் இந்தச் சான்றிதழை வழங்கியது சோழிங்கநல்லூர் தாசில்தார், மேலும் மாண்புமிகு நீதிபதியும் என்னை பாராட்டியுள்ளார். இந்நிலையில் யாரை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூற வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “என்னைப் போன்றே பலரும் சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழைப் பெற வேண்டும். என்னை பற்றிய விமர்சனங்கள் தேவையில்லை. நல்லவனாக இருக்க கூட இந்த நாட்டில் ஒரு சான்றிதழ் தேவைப்படுகின்றது என்பது வருத்தமானது. கடந்த 35 ஆண்டுகளாக என் சினிமா பயணத்தில் நல்ல கருத்துகளை பகிர்ந்து வருகிறேன். தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான பல நலத்திட்டங்களை ‘பார்த்திபன் மனிதநேய மன்றம்’ மூலம் செயல்படுத்தியுள்ளேன். இனி தொடர்ந்து நல்ல திரைப்படங்களை இயக்க வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு அனைவரின் ஆதரவும் வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
