தள்ளிப்போன நடிகர் யஷ்-ன் ‘டாக்சிக்’ திரைப்பட ரிலீஸ்!

மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா உலகத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், ஆக்ஷன் த்ரில்லர் வகையில் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, சுதேவ் நாயர், அக்ஷய் ஒபராய் மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையில் படக்குழு ஏற்கனவே தனித்தனி போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது.

மேலும், ‘டாக்சிக்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த படம் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகும் என திட்டமிடப்பட்டது. பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக வெளியீட்டு தேதி ஜூன் 4-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால், தற்போது அந்த தேதியும் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் யஷ் விளக்கமளிக்கையில், ‘டாக்சிக்’ திரைப்படம் முழுமையாக முடிவடைந்துள்ளதாகவும், தற்போது உலகளாவிய விநியோகம் மற்றும் கூட்டாண்மைகள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் வெளியீட்டு தேதியை மறுசீரமைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும், முன்பே அறிவித்தபடி ஜூன் மாதத்தில் படம் வெளியாகாது என்றும் கூறியுள்ளார். விரைவில் உலகளவில் ஒரே நேரத்தில் வெளியிடக்கூடிய புதிய தேதியை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சில திரைப்படங்கள் நாம் சினிமாவை ஏன் நேசிக்கிறோம் என்பதை நினைவூட்டும் வகையில் இருக்கும் என்றும், ‘டாக்சிக்’ அத்தகைய ஒரு அனுபவமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகளவில் இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட வேண்டும் என்பதால், சரியான நேரத்தை எடுத்துக்கொள்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த படம் இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும் என உறுதியளித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading