தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சில படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சாகர் பி. ஷிண்டே தயாரிப்பில், டி.கே. சேட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தில், முன்னணி நடிகரான ஸ்ரேயாஸ் தல்படே உடன் காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ளார். சமூக பிரச்சினையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஜூலை மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சாகர் பி. ஷிண்டே கூறியதாவது: “நாட்டின் பல பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருக்கும் ஒரு முக்கியமான உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனப் பொருட்களின் தவறான பயன்பாடு, சுற்றுச்சூழல் பிரச்சினையாக மட்டும் இல்லாமல் மனித வாழ்வையே பாதிக்கும் ஒரு பெரிய சிக்கலாக மாறியுள்ளது. இந்த திரைப்படம் மூலம் விழிப்புணர்வை உருவாக்குவதோடு, பொறுப்புணர்வையும் ஏற்படுத்த முடியும் என நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
