சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் மே 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்திற்கு “ஹிட் கொடுக்க வேண்டும்” என்ற அழுத்தம் தன்னிடம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
கருப்பு பட வெளியீட்டை முன்னிட்டு பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டிகள் அளித்து வரும் ஆர்.ஜே. பாலாஜி, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இந்த விஷயங்களை விரிவாக பகிர்ந்துள்ளார்.
அதாவது, “சூர்யா சார் நடித்த இந்த படம் ப்ளாக்பஸ்டர் ஆக வேண்டும் என்பது அவருக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு எனக்கும் முக்கியம். ஆனால் இறுதி முடிவு எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது. நான் முதலில் நினைத்தது, தியேட்டரில் படம் பார்க்கும் அனைவரும் ரசித்து ‘படம் அருமை’ என்று சொல்ல வேண்டும் என்பது தான் சூர்யா சார் இந்த கதையில் நடிக்க ஒப்புதல் அளித்த பிறகு, என்னுடைய எழுத்தாளர்கள் ராகுல் மற்றும் அஷ்வின் ஆகியோரிடம் சில பகுதிகளை மாற்றி எழுத சொல்லினேன்.
அவருக்கு ஏற்றவாறு சில அம்சங்களை மாற்றியும், சிலவற்றை சேர்த்தும் கதையை மேலும் மெருகேற்றினோம். உதாரணமாக, டீசரில் வரும் தர்பூசணி சாப்பிடும் காட்சி, அவர் நடித்த கஜினி திரைப்படத்தை நினைவூட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கதைக்குள் உள்ள பல தருணங்களை ரசிகர்களுக்கு மேலும் ரசனையாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். இந்தப் படம் கண்டிப்பாக ஓட வேண்டும் அல்லது ப்ளாக்பஸ்டர் ஆக வேண்டும் என்ற அழுத்தம் எதுவும் இல்லை. முதலில் எங்களுக்கு பிடிக்க வேண்டும், அதன் பின் பார்வையாளர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்பதே முக்கியம். தயாரிப்பாளர் படம் பார்த்துவிட்டு, ‘நீண்ட நாட்களுக்கு பிறகு அமைதியாக தூங்கினேன்’ என்று கூறியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது” என்று தெரிவித்துள்ளார்.
