‘பிரேக் ஃபாஸ்ட்’ திரைப்படம் எப்படி இருக்கு?- திரைவிமர்சனம்!

காதலித்து திருமணம் செய்த இளம் தம்பதிகளான கிர்த்திக்மோகன் மற்றும் அமிதா ஆகியோருக்கு இடையே உருவாகும் ஈகோ மோதல் காரணமாக அவர்கள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகுகிறார்கள். அப்போது நீதிபதி, “முதலில் நீங்கள் மனநல மருத்துவர் கஸ்தூரியிடம் கவுன்சலிங் பெறுங்கள், அதன் பிறகு உங்கள் வழக்கை பார்க்கலாம்” என்று அறிவுறுத்துகிறார். விவாகரத்தையே பெற வேண்டும் என்ற உறுதியுடன் அவர்கள் கஸ்தூரியை சந்திக்கிறார்கள். அப்போது கஸ்தூரி அவர்களிடம் ஒரு காதல் கதையை பகிர்ந்து கொள்கிறார்.

அந்தக் கதையில் தொழிலதிபரான ரோஸ்மின், பொருளாதார ரீதியாக சிரமப்படும் குடும்பத்தைச் சேர்ந்த ராணவ் என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்கிறார். திருமணத்திற்குப் பிறகு அவர்களுடைய வாழ்க்கையிலும் பல சிக்கல்கள், மோதல்கள் உருவாகின்றன. அவர்கள் பிரிந்தார்களா? இந்தக் கதைக்கும், கிர்த்திக்மோகன் – அமிதா தம்பதிகளின் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? இறுதியில் விவாகரத்து கோரிய இவர்கள் மீண்டும் இணைந்தார்களா? என்பதையே ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற படங்களை இயக்கிய ஏ.ஆர். காந்திகிருஷ்ணா தனது புதிய படமாக சற்று இடைவெளிக்குப் பிறகு சொல்லியுள்ளார்.

ஒரே திரைப்படத்தில் இரண்டு காதல் கதைகளை இணைத்து சொல்லியிருக்கும் இயக்குநர், இரண்டிலும் காதலித்து திருமணம் செய்தவர்கள் எவ்வாறு பின்னர் மோதல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக காட்டியுள்ளார். கிர்த்திக்மோகன் – அமிதா கதையில் விறுவிறுப்பு அதிகமாக இருப்பதுடன், அவர்களின் நடிப்பும், வாக்குவாத காட்சிகளும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. குறிப்பாக அமிதாவின் கோபம் மற்றும் சிறிய முகபாவனைகள் கூட கதைக்கு உயிரூட்டுகின்றன. இன்றைய இளம் தலைமுறையின் காதல், திருமணம் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் மனநிலைகளை இந்தக் கதை நன்றாக பிரதிபலிக்கிறது.

அதே நேரத்தில், கஸ்தூரி சொல்லும் ரோஸ்மின் – ராணவ் காதல் கதை திரைப்படத்தில் அதிக நேரத்தை பிடிக்கிறது. அந்தக் காதல் பகுதி மிகவும் அழகாகவும், குறிப்பாக ரோஸ்மின் கதாபாத்திரம் கவர்ச்சிகரமாகவும் அமைந்துள்ளது. பாடல் காட்சிகளில் அவர் மேலும் சிறப்பாகத் தெரிகிறார். திருமணத்திற்கு பிறகு கோபத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் மற்றும் அவரது நடிப்பு படத்திற்கு பலமாக அமைகிறது. ராணவ் கதாபாத்திரத்தில் நடித்தவர் அறிமுகக் காட்சியிலிருந்து இறுதி வரை நடிப்பிலும் நடனத்திலும் கவனம் ஈர்த்தாலும், உணர்ச்சி வெளிப்பாட்டில் இன்னும் மேம்பாடு தேவைப்படுகிறது.

இரண்டு காதல் கதைகளும் தனித்தன்மை கொண்டதாக இருந்தாலும், அவற்றின் பின்னணியில் வரும் குடும்ப உணர்வுகள் மற்றும் சென்டிமெண்ட் பகுதிகள் படத்தின் பலவீனமாக அமைகின்றன. குறிப்பாக அந்தக் காட்சிகள் 20-30 ஆண்டுகளுக்கு முன்பைய சினிமா பாணியை நினைவூட்டுகின்றன. ராணவின் தாயாக வரும் அர்ச்சனா மற்றும் தந்தையாக வரும் ரங்கநாதன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை நிறைவேற்றியுள்ளனர். ஆனால் ஹீரோயின் தந்தையாக வரும் சம்பத் நடிப்பில் செயற்கைத்தன்மை அதிகமாக தெரிகிறது. குடும்ப பிரச்சினைகள், தந்தை பாசம், கதாநாயகியின் முடிவுகள் ஆகியவை கதையுடன் முழுமையாக பொருந்தாமல் சில இடங்களில் தொடர்கதை போன்று தோன்றுகின்றன. குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு கதை ஓரளவு மந்தமாகிறது. கஸ்தூரி கதாபாத்திரமும் அதில் வரும் திருப்பமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

ஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வம் பாடல் காட்சிகளை வண்ணமயமாகவும் ரசிக்கும்படியாகவும் படமாக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு ஓரளவு வலுசேர்க்கின்றன. பனிமலை மற்றும் இயற்கை பின்னணியில் அமைந்த பாடல்கள் கண்கவர் வகையில் உள்ளன. இருப்பினும், திரைக்கதையில் உள்ள சில குறைகள் காரணமாக இந்த திரைப்படம் முழுமையான திருப்தியை அளிக்காமல் தடுமாறுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading