மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ராஜா சிவாஜி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜெனிலியா டிசோசா உணர்ச்சிவசப்பட்டு மேடையிலேயே கண்ணீர் விட்டது அங்கு இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இப்படத்தை இயக்கியும், அதேசமயம் நாயகனாகவும் நடித்துள்ள ரித்தேஷ் தேஷ்முக், மேடையில் உரையாற்றும் போது இந்த படத்தின் நீண்டகால முயற்சி மற்றும் அதை உருவாக்கும்போது சந்தித்த சவால்கள் குறித்து உருக்கமாக பகிர்ந்தார். அந்த நேரத்தில் தனது மனைவி ஜெனிலியா டிசோசாவை நோக்கி, “நீ தான் எனது மிகப்பெரிய பலம்” என்று அவர் உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
கணவரின் அந்த வார்த்தைகளை கேட்டவுடன், அருகில் நின்றிருந்த ஜெனிலியா டிசோசா தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் மேடையிலேயே கண்கலங்கினார். பின்னர் ரித்தேஷ் தேஷ்முக் அவரை அணைத்துப் பரிவுடன் ஆறுதல் கூறிய தருணத்தின் புகைப்படங்களும், காணொளிகளும் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக வைரலாகி வருகின்றன.
ராஜா சிவாஜி திரைப்படத்தில் ரித்தேஷ் தேஷ்முக் (சிவாஜி மகாராஜ்), ஜெனிலியா டிசோசா (சாய் பாய்), அபிஷேக் பச்சன் (சம்பாஜி), சஞ்சய் தத் (அப்சல் கான்), வித்யா பாலன் (படி பேகம்) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சல்மான் கான், சிவாஜியின் நம்பிக்கைக்குரிய வீரரான ‘ஜீவா மஹாலா’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். அதோடு, பர்தீன் கான் மற்றும் பாக்யஸ்ரீ ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் மும்பை பிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு அஜய்-அதுல் இசையமைத்துள்ளனர். பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த படம், வருகிற மே 1ஆம் தேதி தமிழ், மராத்தி, இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
