நடிகர் ஜேடி சக்கரவர்த்தி, நாகார்ஜுனா நடித்த உதயம் திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பரவலாக அறிமுகமானவர். அதன் பின்னர் ராம் கோபால் வர்மா இயக்கிய சில படங்களில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்தார். தற்போது, முக்கியமான கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்துவருகிறார்.
சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில், நடிகைகள் யாரும் விருப்பப்பட்டு தவறான பாதையில் செல்லவில்லை என்றும், சில சூழ்நிலைகள் அவர்களை அவ்வாறு தள்ளுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதனை விளக்குவதற்காக, தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது: “பல ஆண்டுகளுக்கு முன்பு, நானும் சுரேஷ்வும் அப்போது பிரபலமாக இருந்த ஒரு நடிகையின் அழைப்பை ஏற்று, அவரது இல்லத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொள்ள சென்றோம். அந்த நேரத்தில் திடீரென எதிர்பாராத விதமாக ஒரு பெரிய தயாரிப்பாளர் அங்கு வந்தார். உடனே அந்த நடிகை எங்களை இருவரையும் அறையில் இருந்த கட்டிலின் கீழ் மறைந்து கொள்ளச் சொன்னார். அந்த தயாரிப்பாளர், அந்த நடிகையிடம் கோபமாகப் பேசியதுடன், கேட்கவே சங்கடமாக இருக்கும் சில அநாகரிகமான வார்த்தைகளையும் பயன்படுத்தினார்.
அவர் அங்கிருந்து சென்றபின், நாங்கள் வெளியே வந்தோம். அந்த நடிகை இந்த சம்பவத்தால் மனமுடைந்து இருப்பார் என நினைத்தோம். ஆனால் அவர் சிரித்துக் கொண்டே, ‘இதற்கு நான் பழகிவிட்டேன். என்ன செய்யலாம், அவர் ஒரு பெரிய தயாரிப்பாளர். ஒரு பக்கம் வாய்ப்புகள் தேவைப்படுகிறது. இன்னொரு பக்கம் அவரை எதிர்த்து இந்த துறையில் முன்னேறுவது கடினம்’ என்று மனவேதனையுடன் கூறினார். சினிமாவில் சில நடிகைகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் போராட்டம் இப்படித்தான் இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
—
