தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளார். காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை, டிரைவர் ஜமுனா, பர்ஹானா, தீராக் காதல் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான தீயவர் குலை நடுங்க திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்த திரைப்படம் பாராட்டுகளையும் பெற்றது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் மகேஸ்வர ரெட்டி மூலி இந்த படத்தை தயாரிக்கிறார். இதில் இளம் நடிகர் திருவீர் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு, ஆமணி, முரளிதர், ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம் மற்றும் கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தில் அவர் ஏற்றுள்ள தாமினி கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு சி.ஹெச். குஷேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் பரத் மஞ்சிராஜு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
—
