பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் பந்தயப் போட்டியில் நடிகர் அஜித் குமாரின் அணி இரண்டாவது இடத்தைப் பிடித்து சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் அஜித் குமார், சினிமாவைத் தாண்டியும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கி பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். முன்னதாக துபாயில் நடைபெற்ற ‘24H’ போட்டியில் மூன்றாவது இடத்தையும், இத்தாலியில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இரண்டாவது இடத்தையும் பெற்று கவனம் பெற்றார்.
இந்த நிலையில், பெல்ஜியத்தில் நடைபெற்ற ‘12H Spa-Francorchamps’ பந்தயத்தில் அஜித் குமார் தலைமையிலான அணி இரண்டாவது இடத்தைப் பிடித்து மேலும் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, அஜித் குமார் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி மேடையில் வந்து கோப்பையை பெற்றுக்கொண்டார் என்பது ரசிகர்களிடையே பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெற்றியை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்தப் போட்டியுடன் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அஜித் குமார் கார் ஓட்டும் காட்சிகள், அவரது அணியின் வெற்றி தருணங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.
