இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’. சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்துள்ளதால், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். ஏற்கனவே மாடர்ன் லவ் இணையத் தொடரில் தியாகராஜன் குமாரராஜாவுடன் இணைந்து பணியாற்றியுள்ள இளையராஜா, தற்போது பாக்கெட் நாவல் திரைப்படத்திற்காக மீண்டும் அவருடன் கைகோர்த்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனங்களான டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட் நிறுவனங்களின் மூலம் பாக்கெட் நாவல் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன் இந்த திரைப்படத்திலும் பணியாற்றுகிறார். நடிகர் விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி, நடிகர் கிஷோர் மற்றும் நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கியது. படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. திரைப்படத்தின் போஸ்டர் வெளியீட்டில் கதை மற்றும் திரைக்கதைக்கு ஆண்ட்ரூ லூயிஸ் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆண்ட்ரூ லூயிஸ், தமிழ் சினிமாவில் லீலை, கொலைக்காரன் திரைப்படங்களையும், வதந்தி இணையத் தொடரையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகை மாளவிகா மோகனன் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
