தமிழில் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தை தயாரித்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தற்போது ஹிந்தி திரைப்படத் தயாரிப்பில் தனது முதல் படியை எடுத்துள்ளது. ஏற்கனவே பல வெற்றிப்படங்களை வழங்கியுள்ள இந்த நிறுவனம், ஹிந்தியில் சல்மான் கான் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இவர்களின் தயாரிப்பில் உருவாகும் 63வது படமாக இது அமைகிறது.
தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தின் பூஜை விழா இன்று மும்பை நகரில் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள், இயக்குநர், நாயகன், நாயகி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு படத்தை தொடங்கினர்.
இந்த பூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக நயன்தாரா தனது மகன்களுடன் மும்பைக்கு பயணம் செய்திருந்தார். ஷாரூக் கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படத்திற்கு பிறகு, நயன்தாரா நடிக்க உள்ள அடுத்த ஹிந்தி படம் இதுவாகும். தென்னிந்திய இயக்குநர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் சல்மான் கான், இந்த முறை முழுக்க தென்னிந்திய குழுவுடன் இணைந்து இந்த படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்கியதாக இயக்குனர் வம்சி பைடிபள்ளி தெரிவித்துள்ளார்.
—
