கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘லூசிபர்’ திரைப்படத்தின் மூலம் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்குநராகவும் தனது பயணத்தைத் தொடங்கினார். இந்த படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் பெரிய சாதனையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ‘லூசிபர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘L2: எம்புரான்’ என்ற பெயரில், மீண்டும் மோகன்லால் உடன் இணைந்து இயக்கி வெளியிட்டார் பிரித்விராஜ் சுகுமாரன். இந்த இரண்டாம் பாகம் 200 கோடிக்கு மேல் வசூலைக் கடந்தாலும், சென்சார் குழுவிலும் சில மத அமைப்புகளிடமும் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளை சந்தித்தது. இதற்கிடையில், இந்த படம் வெளியாகும் முன்பே மூன்றாம் பாகம் குறித்து பிரித்விராஜ் பலமுறை குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், பின்னர் இந்த மூன்றாம் பாகம் நிறுத்தப்பட்டதாகவே பலரும் கருதி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் விளக்கம் அளிக்கும்போது, “இத்தகைய சர்ச்சைகள் காரணமாக ‘லூசிபர்’ மூன்றாம் பாகத்தை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். ஆனால், இந்த மூன்றாம் பாகத்தை உருவாக்குவதில் பல சவால்கள் உள்ளன. குறிப்பாக மோகன்லால் அவர்களின் மதிப்புமிக்க நேரம் ஒரு முக்கிய சவாலாக உள்ளது. அதேபோல், நான் தற்போது மேற்கொண்டுள்ள இன்னும் இரண்டு அல்லது மூன்று திரைப்படங்களை முதலில் நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அவை முடிந்த பிறகு தான் ‘லூசிபர்’ மூன்றாம் பாகத்தின் பணிகளில் முழுமையாக ஈடுபட உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
