‘படையப்பா’ பட தலைப்பைப் போல் ‘கர’ படத்தின் தலைப்பு குறித்தும் அதிகம் யோசித்தேன் – இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்!

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கர’ திரைப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் தனுஷின் தந்தையாக கே.எஸ். ரவிக்குமார் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை குறித்து பலவற்றை பகிர்ந்துள்ளார். அதாவது, அஸ்வத் மாரிமுத்து தான் இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். அவரும், இந்தப் படத்தின் இயக்குநருமான விக்னேஷ் ராஜாவும் நண்பர்கள் என்பதால், இந்தக் கதையை கேட்டவுடன் அப்பா கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பியதாக தெரிவித்தார். இதற்கு முன்பு ‘தங்கமகன்’ படத்தில் தனுஷின் தந்தையாக நடித்திருந்தாலும், ‘கர’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், பல் செட் மற்றும் மேக்கப் மூலம் என்னை முழுவதும் மாற்றியிருக்கிறார்கள் என்றும் கூறினார்.

நான் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளேன். தற்போது அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். நடிப்பது மிகவும் சுலபமாகவும், சுமூகமாகவும் இருக்கிறது. எந்த அழுத்தமும் இல்லாமல், போதுமான நேரம் கிடைக்கிறது. படப்பிடிப்பு தளங்களில் நடிகர்கள் எனது அனுபவங்களை கேட்கும்போது, நான் அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படப்பிடிப்பின் போது தனுஷ் மிகவும் அமைதியாக இருந்து தனது கதாபாத்திரத்தில் முழுமையாக மூழ்கி இருப்பார். அவருடன் யாரும் எளிதில் பேச முடியாது. நான் பழக்கப்படி செட்டில் கத்தி பேசுவேன்; அப்படித்தான் கட்டுப்பாடு இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் மிகவும் அமைதியானவர். ஏதேனும் திருத்தம் இருந்தால், சம்பந்தப்பட்டவர்களிடம் தனியாக சென்று மெதுவாக சொல்லிவிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சுராஜ் வெஞ்சரமூடு நடித்த மலையாளப் படங்களை பார்த்து ரசித்துள்ளேன். அவர் நடித்த ‘ஆண்ட்ராய்டு குட்டப்பன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்த அனுபவமும் உண்டு. அவருடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரை சந்திக்க விரும்பிய நான், அவரே வந்து பேசிச் சிநேகமாக பழகியதும், எனது படங்களைப் பற்றி விவாதித்ததும் மகிழ்ச்சி அளித்தது என்றார்.

தற்போது, நான் படப்பிடிப்பு தளங்களுக்கு என் மனைவியுடன் செல்கிறேன். அங்கே என் மனைவியும், இந்தப் படத்தின் நாயகியான மமிதா பைஜூவும் நல்ல நண்பர்களாகி விட்டனர். சமீப காலத்தில் பார்த்த ஹீரோயின்களில் மமிதா மிகவும் உற்சாகமாகவும், அனைவருடனும் எளிதாக பழகும் தன்மையுடையவராகவும் உள்ளார். அவ்வப்போது ரஜினிகாந்த் அவர்களுடன் பேசும் போது ‘படையப்பா 2’ குறித்து விவாதித்தோம். ஆனால் முதல் படத்தை விட மேலான படமாக இருக்குமா என்ற சந்தேகம் காரணமாக அது தொடரப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

‘கர’ என்ற தலைப்பை முதலில் கேட்டபோது அது என்ன என்று யோசித்தேன். ‘கர’ என்பது கரை ஓரத்தில் இருக்கும் காவல் தெய்வத்தை குறிக்கும். இந்தப் படம் ராமநாதபுரம் பின்னணியில் அமைந்துள்ளது. ‘படையப்பா’ என்ற தலைப்பையும் ஆரம்பத்தில் சந்தேகத்துடன் பார்த்தேன். ஆனால் அது மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்போது அதிக படங்கள் வெளிவருவதால் தோல்விகள் அதிகமாகத் தோன்றுகின்றன. இருந்தாலும் தமிழ் சினிமாவின் வெற்றி விகிதம் மாறவில்லை என்று கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading