ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் சமீபத்தில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்த படத்தில் வெற்றியை பெறும் நோக்கத்தில் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ‘பெத்தி’ என்ற படத்தில் அவர் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சிவ ராஜ்குமார், திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிக செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் முதலில் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் பாடல்கள் மற்றும் முன்னோட்டங்களுக்கு நீங்கள் அளித்த மிகப்பெரிய ஆதரவுக்கு நன்றி. ‘பெத்தி’ திரைப்படத்திற்கு நீங்கள் காட்டும் அன்பு எங்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது. படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டன; இன்னும் ஒரு பாடல் மட்டும் எடுக்கப்பட வேண்டியுள்ளது. எடிட்டிங் பணிகளை பார்த்தபோது அதன் தரம் எங்களுக்கு திருப்தி அளித்துள்ளது.
இந்த சிறந்த படைப்பை ரசிகர்களுக்கு மிகச்சிறந்த முறையில் வழங்க வேண்டும் என்பதற்காக, தொழில்நுட்ப மற்றும் பின்னணி பணிகளுக்கு மேலும் சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, இந்தப் படத்தின் வெளியீட்டை ஜூன் மாதத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளோம். புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் ஆதரவும் பொறுமையும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.
