பிரபல இயக்குநர் ராம் இயல்பான மற்றும் உணர்ச்சிகரமான கதைகளைக் கொண்டு படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பெற்றவர். அவர் இயக்கிய ‘கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி’ போன்ற பல வெற்றி படங்கள் அவரது திறமையை வெளிப்படுத்துகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஏழுகடல் ஏழுமலை’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், மேலும் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் பல விலங்குகள் தொடர்பான காட்சிகள் கணினி கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இப்படம் வெளியீட்டிற்கு தயாராக இருந்தபோதிலும், சில காரணங்களால் வெளியீட்டில் தாமதம் ஆனது.
மேலும், இந்த திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவிலும், ரஷ்யாவின் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு, அங்கு பார்வையாளர்களிடமிருந்து சிறந்த வரவேற்பும் பாராட்டுகளும் பெற்றது. தற்போது, ‘ஏழுகடல் ஏழுமலை’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கோல்டன் ஸ்பாரோ நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
—
