நடிகர் ஜூனியர் என்டிஆர், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்காக தனது உடல் அமைப்பை வலுவாக மாற்றி வருகிறார். ‘தேவரா’ திரைப்படத்திற்குப் பிறகு, அவர் மீண்டும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘டிராகன்’ என கூறப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முழுமையான ஆக்ஷன் கதையம்சத்துடன் உருவாகும் இந்த திரைப்படத்தில், நாயகியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். இப்படத்திற்காக ஜூனியர் என்டிஆர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், தனது உடல் எடையையும் கணிசமாகக் குறைத்துள்ளார். அவரது இந்த மாற்றத்தை காட்டும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கவனத்தை பெற்றன.
தற்போது, அவர் தனது உடலை மேலும் கட்டுமஸ்தாக மாற்றி வருகிறார். இது படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கான தோற்றமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த புதிய லுக் தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களிடையே வேகமாக வைரலாக பரவி வருகின்றன.
