என் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையை உருவாக்கியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தயாரிப்பாளர் ஏக்தா கபூர் நெகிழ்ச்சி!

பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவராக விளங்கும் ஏக்தா கபூர், பிரபல நடிகர் ஜிதேந்திராவின் மகளாக அறியப்படுகிறார். தற்போது இந்தி திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் இவர், தனது தொடக்க காலத்தில் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு அதன்மூலம் பெரும் புகழைப் பெற்றார். குறிப்பாக தமிழில் இவர் தயாரித்த தொடர்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையை உருவாக்கியவர் நடிகர் ரஜினிகாந்த் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “என் தந்தையும் ரஜினிகாந்தும் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் அவர் எங்கள் வீட்டிற்கு மதிய உணவிற்கு வந்திருந்தார். அப்போது நான் மனமுடைந்த நிலையில் இருந்ததை கவனித்த அவர், என்ன பிரச்சினை என்று கேட்டார். எனக்கு வேலை இல்லை, நான் வேலை செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்தேன். அதற்கு அவர், ‘அது பெரிய விஷயம் அல்ல, கவலைப்பட வேண்டாம். உனக்கு ஒரு முக்கியமான நபருடன் சந்திப்பை ஏற்பாடு செய்து தருகிறேன்’ என்று கூறினார். அதன் பின்னர் அந்த நபரை சந்தித்ததன் மூலம் தமிழில் தொடர்கள் தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

வடஇந்தியாவிலிருந்து வந்து தமிழில் தொடர்கள் தயாரிப்பதற்கு ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் இருந்தாலும், கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி நல்ல தொடர்களை வழங்கினேன். இங்கே கிடைத்த வெற்றியின் மூலம் தான் பின்னர் இந்தி உலகிலும் தொடர்கள் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் நான் ஒரு நட்சத்திரத்தின் மகளாகவே இந்த துறையில் நுழைந்ததாக சிலர் கூறினாலும், எனது திறமையால் தான் நான் இந்த நிலையை நிலைநிறுத்திக் கொண்டேன்” என தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading