‘வரதன்’, ‘விக்ருதி’, ‘சூப்பர் சரண்யா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் நடிகை மமிதா பைஜு. கேரளத்தைச் சேர்ந்த இவருக்கு தென்னிந்திய அளவில் பெரும் புகழை பெற்றுத்தந்த படம் ‘பிரேமலு’ ஆகும். அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த அவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்; அதன் பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அதிகரித்தன.
தமிழிலும் நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் ‘டியூட்’ திரைப்படத்தில் நடித்த அவர் நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது நடிகர் விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகர் தனுஷுடன் ‘கர’, நடிகர் சூர்யாவுடன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’, நடிகர் நிவின் பாலியுடன் ‘பத்தேலம் குடும்ப யூனிட்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை மமிதா பைஜு, நடிகர் தனுஷை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “தனுஷ் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம் போன்றவர். அவருடன் இணைந்து நடித்ததில் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். குறிப்பாக துணை நடிகர்களுக்கு அவர் உருவாக்கும் சௌகரியமான சூழல் மிகவும் சிறப்பானது. ‘கர’ திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக ஒரு கிராமப் பெண் கதாபாத்திரத்தில் நடித்தேன்; அந்த தோற்றமும் கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பொருந்தியது” என்று தெரிவித்துள்ளார்.
