நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், படத்தை பார்த்த தணிக்கை வாரிய உறுப்பினர்கள் மதம் மற்றும் பாதுகாப்புப் படைகள் தொடர்பான காட்சிகள் உள்ளதாகக் குறிப்பிட்டு, மறுஆய்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பினர்.
இதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு பிறகு, தயாரிப்பு நிறுவனம் படத்தை மறுதணிக்கைக்காக மீண்டும் அனுப்பியுள்ளது. விரைவில் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த இந்த திரைப்படம், தணிக்கை சிக்கல்களால் நீதிமன்றம் வரை சென்ற நிலையில் தள்ளிப்போனது. பின்னர், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின் மே மாத இரண்டாவது வாரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த விஜய், தனது திரைப்படத்திற்கு திட்டமிட்ட வகையில் சிக்கல்கள் உருவாக்கப்படுகின்றன என குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டன. மேலும், அதிகாலை நேரத்தில் முழு திரைப்படமும் இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இணையத்தில் வெளியான கசிந்த பிரதிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
