ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் உருவான ‘மீசையை முறுக்கு’ திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை சுந்தர் சி தயாரித்திருந்தார். வெளியானபோது இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் அதன் பின்னர் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் படங்கள் அதே அளவிலான வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில், அவர் தற்போது ‘மீசையை முறுக்கு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார்.
இந்தப் படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, பாலிவுட் நடிகை கேட்டிகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்ஷத் கான், ‘ஆடுகளம்’ நரேன், நாசர், ரம்யா ரங்கநாதன், ஷா ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையை ஹிப் ஹாப் தமிழா ஆதி தானே அமைத்துள்ளார்.
வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அவ்னி மூவிஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.சி.எஸ் அருண்குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் இணைந்து தயாரித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘ஆரா பத்து க்கு ஆரா’ என்ற முதல் பாடல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ‘பப்பாளி பழமே’ என்ற இரண்டாவது பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படம் கோடை விடுமுறை காலத்தில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
