தென்னிந்திய திரைப்படங்களிலும், பாலிவுட் படங்களிலும், வலைத் தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகை தமன்னா. சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களை கடந்த பின்னரும், தனது கவர்ச்சியையும் நடிப்பு திறமையையும் இழக்காமல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போதைய தலைமுறை நடிகைகளுடன் போட்டியிட்டு நடிப்பதோடு, சிறப்பு பாடல்களிலும் தோன்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஒரு சிறப்பு பாடலில் நடிப்பதற்காக அவர் சுமார் ரூ.6 கோடி வரை சம்பளம் பெறுகிறார் என கூறப்படுகிறது. தற்போது ‘புருஷன்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
சினிமாவில் 21 ஆண்டுகளை கடந்ததை முன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமன்னா, “என்னுடைய திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாவதற்கான நிலைமை எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. நான் சினிமாவில் அடியெடுத்து வைத்து 21 ஆண்டுகள் ஆனபோதிலும், ஒவ்வொரு முறையும் புதியதாக ஆரம்பிக்கிறேன் என்ற உணர்வே எனக்குள் உருவாகிறது. குறிப்பாக, பெண் நடிகைகளுக்கு இத்தகைய வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் அரிதானது.
ரசிகர்கள் என்னை தொடர்ந்து அன்புடன் ஆதரித்து வருகின்றனர். தென்னிந்திய திரைப்படங்கள் மூலம் மக்கள் என்னை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளனர். அதே சமயம், இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் கிடைக்கும் அன்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. மக்கள் என்னிடம் காட்டும் அன்பிற்கு நான் எவ்வாறு நான் என்ன செய்வது என்பதை தொடர்ந்து சிந்தித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
