நடிகர் ஆர்யா வித்தியாசமான கதைகளையும், தனித்துவமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ‘நான் கடவுள்’, ‘மதராசப்பட்டினம்’, ‘அவன் இவன்’, ‘இரண்டாம் உலகம்’, ‘மகாமுனி’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன் திரில்லர் வகையைச் சேர்ந்த இந்தப் படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடித்துள்ளார். மேலும், சரத்குமார், மஞ்சு வாரியர், அனைகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதேபோல், கவுதம் ராம் கார்த்திக்கும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திபு நிபுணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் ஆக்ஷன், ஸ்பை திரில்லர் வகையில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திரைப்படம் வருகிற 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
