தென்னிந்திய திரையுலகில் பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்துவரும் நடிகை மஞ்சு வாரியர், நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் ராம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 16ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர் அஜித் குமாருடன் மேற்கொண்ட பைக் பயணம் குறித்து மஞ்சு வாரியர் மனம் திறந்து பேசியுள்ளார். அந்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் கூறுகையில், “அஜித் குமாருடன் மேற்கொண்ட பயணம் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. லடாக் பகுதியில் அவருடன் இணைந்து 14 நாட்கள் பயணம் செய்தேன். அந்த பயணத்தின் போது, விபத்து ஏற்பட்டால் நம்மை நாமே எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையே முதலில் அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். எனக்கு வாகனம் ஓட்டத் தெரிந்திருந்தாலும், அப்போது எனக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை. தொழில்முறை ஓட்டுநர்கள் குழுவுடன் பயணம் செய்தது எனக்கு புதுமையான அனுபவமாக இருந்தது. அந்தப் பயணத்திற்குப் பிறகுதான் நான் ஓட்டுநர் உரிமம் பெற்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
