ராப் பாடகராக தனது பயணத்தைத் தொடங்கிய ஹிப் ஹாப் ஆதி, பின்னர் திரைத்துறையில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார். ‘ஆம்பள’, ‘தனி ஒருவன்’, ‘அரண்மனை’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு வெளியான ‘மீசையை முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமானார். அதன் பின்னர் ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘சிவகுமாரின் சபதம்’, ‘அன்பறிவு’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கல்லூரி மாணவனின் கனவுகள், காதல் மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் வெளிப்படுத்திய ‘மீசையை முறுக்கு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘மீசையை முறுக்கு 2’ திரைப்படத்தை ஆதி தானே இயக்கி நடித்துள்ளார். சுந்தர் சி மற்றும் குஷ்பு இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் ‘மீசையை முறுக்கு 2’ திரைப்படத்தின் டீசர் மற்றும் ‘ஆரா 10/10’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாடலாக ‘பப்பாளி பழமே’ வெளியிடப்பட்டுள்ளது. ‘ஆரா 10/10’ பாடலைப் போலவே இந்தப் பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘மீசையை முறுக்கு 2’ திரைப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
