தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமா குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்தார். அவர் பேசுகையில், “சினிமாவில் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்குக் கூட சில நேரங்களில் பின்னடைவு ஏற்படுகிறது. அதற்கான எடுத்துக்காட்டாக என்னையே சொல்லலாம். நான் தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை வழங்கியிருந்தாலும், என் ‘பிசாசு 2’ திரைப்படம் கடந்த ஆறு ஆண்டுகளாக வெளியீட்டை காணாமல் தாமதமாகி வருகிறது. அதேபோல் ‘டிரெய்ன்’ திரைப்படமும் இரண்டு ஆண்டுகளாகியும் வெளியாகவில்லை.
இந்த அனுபவங்கள் எனக்கு என்ன கற்றுக் கொடுக்கின்றன என்றால், சினிமா என்பது எளிதில் அடையக்கூடிய ஒன்று அல்ல. அது உயரமான ஒரு மலையைப் போன்றது; அதை ஏறுவதற்கு மிகுந்த முயற்சியும் பொறுமையும் தேவைப்படுகிறது. சில நேரங்களில் மிகப் பெரிய அனுபவம் கொண்டவர்களையே சினிமா சோதிக்கும்.
அதனால் தான் இந்த துறை இன்னும் உயர்ந்ததாகவும், மக்களை ஈர்க்கும் வகையிலும் இருக்கிறது.பட விழாக்களின் மேடையில் பேசிக்கொண்டே இறப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதைவிட பெரிய ஆசையும், ஆறுதலும் எனக்கு இல்லை. காரணம், நான் சினிமாவை அந்த அளவிற்கு நேசிக்கிறேன்,” என்று உருக்கமாக தெரிவித்தார்.
