பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானாலும், ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன.
இதனைத் தொடர்ந்து, ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. எனினும் சில காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தாமதமாகி, தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இதற்கிடையில் நடிகர் ஆர்யா, பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்துவர, ஆர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் நடிகர் ஆர்யா ‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதாவது, இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன், ஆர்யா, மஞ்சு வாரியர், கவுதம் ராம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்த ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் வருகிற 17ஆம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
