தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நடைபெறும் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 15ஆம் தேதி அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி, அசாம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
140 தொகுதிகள் கொண்ட கேரள மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவற்றுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்டு வருவதோடு, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த தேர்தலில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 883 பேர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் சுரேஷ் கோபி ஆகியோர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
