‘கொன்றால் பாவம்’, ‘மாருதிநகர் காவல் நிலையம்’ போன்ற திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்ற தயாள் பத்மநாபன், தற்போது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்சி ஆண்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், இளவரசு மற்றும் கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமா வரலாற்றில் இடம்பெற்ற உண்மை சம்பவத்தை புதிய கோணத்தில் பதிவு செய்துள்ள இந்தப் படம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படம் பின்னணி பணிகளில் உள்ளது. 2எம் சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் கதாபாத்திர அறிமுக காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வெற்றி ‘அறிவுமதி’ என்ற கைதி கதாபாத்திரத்தில், ரங்கராஜ் பாண்டே ‘சிவானந்தம்’ என்ற சிறை அதிகாரியாக அறிமுகப்படுத்தப்படுகின்றனர். மேலும், பிரிகிடா ‘மல்லிகா’, சரவணன் ‘சற்குணம்’, லொள்ளு சபா மாறன் ‘மூர்த்தி’, லிஸ்சி ஆண்டனி ‘சூடாமணி’, சுப்ரமணியம் சிவா ‘தர்மன்’ ஆகிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும், சுப. வீரபாண்டியன் முக்கியமான சிந்தனையாளராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு எம்.வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளதுடன், தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
