பிரபல மலையாள திரைப்பட இயக்குநரான பிரியதர்ஷன் தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களையும் இயக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது ஹிந்தி மொழியில் ‘பூத் பங்களா’ மற்றும் ‘ஹைவான்’ எனும் இரண்டு திரைப்படங்களை ஒரே நேரத்தில் இயக்கியுள்ளார். இந்த இரு திரைப்படங்களிலும் நடிகர் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் ‘ஹைவான்’ திரைப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கனும் இணைந்து நடித்துள்ளார். இவற்றில் ‘பூத் பங்களா’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதுகுறித்து அளித்த பேட்டியில் பிரியதர்ஷன் கூறுகையில், “அக்ஷய் குமார் சாதாரண மனிதரைப் போன்றவர். அவரை எந்தக் கதாபாத்திரத்திலும் எளிதாக பொருத்திக் கொள்ள முடியும். உயர்நிலை வாழ்க்கை வாழும் நபராக இருந்தாலும் சரி, கிராமப்புற விவசாயியாக இருந்தாலும் சரி, அவரது உடல் மொழி அதற்கு ஏற்றபடி மாறும். ஆனால் ஷாருக் கான் போன்றவரால் கிராமத்து மனிதர் கதாபாத்திரத்தில் இயல்பாக நடிக்க முடியாது. காரணம், அவரது உடல் அமைப்பும் அவர் வளர்ந்த சூழலும் அப்படியில்லை.
நான் அவரை வைத்து ‘பில்லு பார்பர்’ திரைப்படத்தை இயக்கியபோது, கேரளாவின் சில கிராமப்புறங்களுக்கு அவரை அழைத்துச் சென்றேன். அவை எனக்கு நன்கு அறிமுகமான இடங்களாக இருந்தாலும், அந்த இடங்களை நீங்கள் எவ்வாறு கண்டுபிடித்தீர்கள் என்று ஷாருக் கான் ஆச்சரியத்துடன் என்னிடம் கேட்டார். மேலும், நான் நகரத்தில் பிறந்து வளர்ந்ததால் இத்தகைய கிராமங்களை நேரில் பார்த்ததில்லை என்று அவர் நேர்மையாக ஒப்புக் கொண்டார்,” என்று தெரிவித்துள்ளார்.
