‘தி ராக்கி ஹாரர் பிக்சர் ஷோ’ பட ஹாலிவுட் நடிகர் டிம் கர்ரி காலமானார்!

ஹாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகரும் பாடகருமான டிம் கர்ரி தனது 80வது வயதில் காலமானார். லாஸ் ஏஞ்சலஸில் உள்ள அவரது இல்லத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் அமைதியாக உயிரிழந்ததாக அவரது மேலாளர் மார்சியா ஹர்விட்ஸ் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

‘தி ராக்கி ஹாரர் பிக்சர் ஷோ’வில் டாக்டர் பிராங்க் என் பர்ட்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் பெரும் புகழை பெற்றவர் டிம் கர்ரி. 1973-ம் ஆண்டு லண்டன் மேடை நாடகத்தில் முதன்முதலில் இந்த வேடத்தை ஏற்ற அவர், அதனைத் தொடர்ந்து 1975-ல் திரைப்படமாக உருவானபோதும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு கிடைக்காத இப்படம் பின்னர் உலக அளவில் புகழ்பெற்ற கால்ட் கிளாசிக்காக மாறியது.

வில்லன் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய டிம் கர்ரி, ‘Clue’, ‘Annie’, ‘Legend’, ‘Home Alone 2: Lost in New York’, ‘The Three Musketeers’, ‘Charlie’s Angels’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேடை நாடகங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய அவர், ‘Amadeus’, ‘My Favorite Year’, ‘Monty Python’s Spamalot’ ஆகிய படைப்புகளுக்காக டோனி விருதுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டார்.

2012-ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிறகு அவரது நடிப்பு வாய்ப்புகள் குறைந்தன. எனினும், 2024-ல் வெளியான ‘Stream’ என்ற ஹாரர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றினார். நடிப்பைத் தாண்டி இசையிலும் ஆர்வம் கொண்டிருந்த அவர், தனது இசைக்குழுவுடன் இணைந்து ஆல்பங்களை வெளியிட்டதுடன், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading